பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு ஆர்ப்பாட்டம்

நாகை, பிப். 26: பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் தொமுச வீரபாண்டியன், ஏஐடியூசி சிவதாஸ், சிஐடியூ சிவக்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மகேந்திரன், சிஐடியூ மாவட்ட செயலாளர் சிவனருட்செல்வன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம், பணிவரன், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும். தமிழக அரசின் நிதி வருவாயில் 5ல் 1 பங்கு வருவாயை மதுபானம் மூலம் ஈட்டி தரும் பணியில் உள்ள ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

ஆய்வு என்ற பெயரில் பல துறைகளில் மிரட்டல், கடை முடிந்து வீடு திரும்பும் ஊழியர்கள் மீதான சமூகவிரோதிகளின் தாக்குதலால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் சூழ்நிலையை மாற்ற பணி நேரம் இரவு 10 மணி வரை என்பதை இரவு 8 மணி வரையென குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஏஐடியூசி மாநில செயலாளர் இளங்கோவன், தொமுச மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கவியரசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரபோஜி மற்றும் பலர் பங்கேற்றனர். ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் அம்பேத்கர் நன்றி கூறினார்.

Related Stories: