தென்காசியில் தொடர் கைவரிசை நாகை வாலிபர் கைது

தென்காசி, பிப். 26: தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக வீடுகளை உடைத்து தொடர் திருட்டுகள் அரங்கேறின. இதையடுத்து எஸ்பி சுகுணாசிங் உத்தரவின் பேரில், டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ மாரிமுத்து, ஏட்டுகள் கோபி, ஜோஸ் முத்தையா பாண்டியன், வடிவேல்முருகன், கருப்பசாமி, முருகன், அருள்ராஜ், அலெக்ஸ், சீவலமுத்து, முத்துக்குமார், கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் தென்காசியில் தனிப்படையினர் ரோந்து சென்ற போது சந்தேகத்தின் பேரில் வாலிபரை ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அவர், நாகப்பட்டினம் அக்கரை கீழ்குளம் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் மனோஜ் (24) என்பதும், தென்காசி அண்ணா நகர் 6வது மற்றும்  10வது தெரு, மேசியா நகர், ஜமாலியா நகர் மற்றும் பாவூர்சத்திரம், ஆலங்குளம் ஆகிய இடங்களில் இவரும், திண்டுக்கல்லை சேர்ந்த சேகர் என்ற ராஜசேகர் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து வீடுகளை உடைத்து கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து மனோஜிடம் இருந்து 350 கிராம் எடையுள்ள தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் உள்பட ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் இவரது கூட்டாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: