×

மீண்டும் அச்சமூட்டும் வகையில் ஏறுமுகம் நெல்லையில் அதிமுக பிரமுகர் உள்பட 14 பேருக்கு கொரோனா

நெல்லை, பிப். 26:  நெல்லை மாவட்டத்தில்  ஒரே நாளில் அதிமுக பிரமுகர் உள்பட 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மீண்டும் அச்சமூட்டும் வகையில் பரவல் ஏறுமுகமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 3 மாதமாக இறங்குமுகமாக இருந்து கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் ஏறுமுகமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 31 சதவீதம்  மகராஸ்டிரா, கேரளா, மபி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோல் தமிழகத்திலும் பரவும் வாய்ப்பு உள்ளது. மக்கள் அலட்சியமாக இருந்தால் நிலைமை மோசமாகும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

கொரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதை மறந்து பொதுமக்களில் பலர் மாஸ்க் போடாத நிலை, பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றாதது, கை கழுவுதலை விடுதல் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பான நிலையான வழிமுறைகளை பின்பற்றாமை நீடித்தால் நமக்கும் இதுபோல் கொரோனா பரவல் எண்ணிக்கை உயரும் வாய்ப்பு உள்ளது.  நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பரவல் ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பரவி இரட்டை இலக்கமாக உயர்ந்தது. நேற்று மேலும் உயர்ந்து 14 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.

அரசு மருத்துவமனை பரிசோதனை கூடத்தில் நேற்று முன்தினம் 1010 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் நேற்று காலை அறிவிக்கப்பட்டன.இதன்படி பெருமாள்
புரம் ஸ்டேட் பாங்க் காலனியில் ஒரே முகவரியில் 7 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதேபோல் கிருஷ்ணாபுரத்தில் ஒரே முகவரியில் 3 பேருக்கு பரவியுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவருக்கும் கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் உருமாறிய கொரோனா இரண்டாம் அலையாக பரவி வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அச்சமூட்டும் வகையில் ஏறுமுகமாக உள்ளது  அச்சமடையச் செய்துள்ளது.

கொரோனா பாதித்தவர் வியாபாரத்தில் சுறுசுறுப்பு
பொதுமக்கள் ஒருபுறம் அச்சமின்றி இருந்தாலும் சுகாதாரத்துறையினரின் நடவடிக்கையும் தற்போது வரை மந்தமாகவே உள்ளது. குறிப்பாக கொரோனா பரவல் ஏற்படும் பகுதிகளில் ஆரம்ப கட்டத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் எதுவும் தற்போது எடுப்பதாகத் தெரியவில்லை.
முன்பு ஒரு தெருவில் ஓரிருவருக்கு கொரோனா வந்தாலும் தெருவையே அடைத்து மக்களை வெறுப்பேற்றிய நிலையில் தற்போது கொரோனா பாதித்த பகுதிகளில் யாருக்கு கொரோனா வந்திருக்கிறது என்பது அருகில் இருப்பவர்களுக்கு கூட தெரியாத நிலை உள்ளது.

பாளையங்கோட்டையில் கொரோனா தொற்றுக்கு ஆளான முக்கிய பிரமுகர் ஒருவர் முககவசம் மட்டும் அணிந்தபடி தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்ட தகவல் வெளியே தெரிந்ததால் சுகாதார துறையினரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே சுகாதார நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும். ஒரு பகுதியில் ெகாரோனா பாதித்தவர் இருந்தால் அந்த பகுதியில் உள்ள அணைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதும் அவசியம். இல்லையேல்  பழைய அனுபவங்களை மீண்டும் சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு