ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்க நடவடிக்கை பாளை வஉசி மைதானம் இடிப்பு

நெல்லை, பிப். 26:  நெல்லையின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான பாளை வஉசி மைதானம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடித்து அகற்றப்படுகிறது. இங்கு ரூ.14 கோடியில் வணிக கடைகளுடன் புதிய கேலரிகள் அமைக்கப்பட உள்ளன. நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  பஸ்நிலையங்கள் கட்டுதல், வணிக வளாகம், காய்கனி சந்தைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஏற்கனவே இருந்த பஸ்நிலையங்கள் மற்றும் சந்தை கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக மேலும் ஒரு திட்டப்பணியாக நெல்லையின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான  பாளை  வஉசி மைதானத்தை இடித்து புதிதாக கட்டும் பணி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த 1965ம் ஆண்டில் பாளையின் மைய பகுதியில் வஉசி பெயரில் அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கம் இடித்து அகற்றும் பணி துவங்கியது. அதிகாலை முதல் 2 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. 56 ஆண்டுகளை கடந்த இந்த விளையாட்டு மைதானத்தில் வீரர்களுக்கான அறைகள் மற்றும் விழா மேடை கட்டிடம் உள்ளன. இந்த பிரதான கட்டிடங்களும், கேலரிகளும் முழுமையாக இடித்து அகற்றப்பட உள்ளன.

சுமார் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிய கேலரி மற்றும் விளையாட்டு வீரர்கள் ஓய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. மேலும் திருவனந்தபுரம் சாலையையொட்டி உள்புறம் அமையும் கேலரிகளின் கீழ்ப்பகுதியில் திருவனந்தபுரம் சாலையை நோக்கி வர்த்தக கடைகளும் அமைக்கப்பட உள்ளன.  இப்பணிகள் அனைத்தையும் ஓராண்டிற்குள் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடிக்கும் பணி நடந்து வருவதால் விளையாட்டு அரங்கிற்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள பூங்கா மற்றும் உள்விளையாட்டு அரங்கு பகுதியில் செல்ல தடை இருக்காது. மைதானத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்வோர் மற்றும் விளையாட செல்லும் வீரர், வீராங்கனைகளின் நிலை அடுத்த ஓராண்டுக்கு திண்டாட்டமாகும் சூழல் உருவாகியுள்ளது.

தேசிய போட்டிகள்  கண்ட மைதானம் பாளை. வஉசி மைதானம், கடந்த 12.1.1965ல் திறக்கப்பட்டது. ஹாக்கி போட்டிகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அனைத்து விதமான போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. மாவட்ட, மாநில. தேசிய அளவிலான போட்டிகள், பல்கலைக்கழக போட்டிகள் என பல விளையாட்டு போட்டிகள் இங்கு நடந்து வீரர்களால் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இம்மைதானத்தில்தான் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்கள் கொண்டாடப்படும். அரசு நிகழ்ச்சிகளும், தனியார் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. ஜல்லிகட்டுக்காக நடந்த போராட்டத்தின் போது இங்கு ஏராளமான மக்கள் பல நாட்களாக 24 மணி நேரமும் முகாமிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. விளையாட்டு மைதானத்தை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள மேடை மற்றும் வீரர்களுக்கான ஓய்வறை அலுவலக அறைகளின் கட்டிடங்கள் மிகவும் பலம் வாய்ந்தவையாக உள்ளன.

கேலரிகளின் சிலாப்புகளும் தற்போதும் அதிகபலத்துடன் உள்ளன. சிலாப்புகளை நொறுக்கி உடைத்து எடுக்காமல் முழுமையாக அகற்றி ஓடை மீது போடுவதற்கோ வேறு பயன்பாட்டிற்கோ பயன்படுத்தலாம் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Related Stories:

>