எருதாட்ட விழா கோலாகலம்

ஓமலூர், பிப்.26: ஓமலூர் அருகே பாலகுட்டப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட விழா நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலகுட்டப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா, 3 நாள் நடந்தது. விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்ட எருதாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பல்வேறு மாவட்டங்ளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் காளைகளை அழைத்து வந்து கோயிலை சுற்றியும், மைதானத்தில் ஓட விட்டு எருதாட்டம் நடத்தினர்.

காளைகளை உசுப்பேற்றுவதற்காக, உரிபொம்மைகளை அதன் முன்பு காட்டினர். இதை கண்ட காளைகள் துள்ளிக்குதித்து இளைஞர்களை இழுத்துக்கொண்டு மைதானத்தில் ஓடியது. அப்போது, சில காளைகள் பார்வையாளர் பக்கம் ஓடி வந்து மிரட்டியது. எருதாட்டத்தை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மேலும், எருதாட்டத்தில் கலந்துகொண்ட காளைகளுக்கு பூஜை செய்தனர். பொதுமக்கள் குவிந்ததால், பாதுகாப்பிற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Related Stories: