நாமக்கல்லில் சதமடித்த வெயில்

நாமக்கல், பிப்.26: நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து, நேற்று சதமடித்தது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் வரை மழை பெய்தது. கார்த்திகையை தாண்டி மார்கழி மாதத்திலும் மழை கொட்டித் தீர்த்ததால், அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுல், பல்வேறு இடங்களில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. எப்போதும் இல்லாத அளவிற்கு தை பிறப்பின்போது பலத்த மழை பெய்ததால், பொங்கல் பண்டிகை பிசு பிசுத்தது. மத்திய மாவட்டமான நாமக்கல் பகுதியிலும் நல்ல மழை பெய்தது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு பகுதியை காவிரி ஆறு வளம் கொழிக்கச் செய்தாலும், பெரும்பாலான நிலப்பகுதி வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. இதனால், தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சாகுபடி பணியையும் முடுக்கி விட்டனர். தற்போது கோடைக்கு முன்பாகவே வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. மாத துவக்கத்தில் அதிகபட்சமாக 93 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவான வெயில் அளவு, படிப்படியாக அதிகரித்து கடந்த 14ம் தேதி 96 டிகிரி பாரன்ஹீட்டானது.

தொடர்ந்து வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று முன்தினம் 97 டிகிரி பாரன்ஹீட்டாக வெயில் சுட்டெரித்தது. நேற்றைய நிலவரப்படி, வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் அளவு 99 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>