×

சென்னையில் தரையிறங்கி ஓடுபாதையில் ஓடிய விமானத்தின் அவசரகால கதவை திறந்து வெளியே குதித்து தப்பி ஓடிய பயணி: பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்

 

சென்னை: சார்ஜாவில் இருந்து சென்னை வந்த ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை சென்னையில் தரையிறங்கி ஓடு பாதையில் ஓடி டாக்ஸி வேயில் திரும்பியபோது, திடீரென பயணி ஒருவர் அவசர கால கதவை திறந்து, வெளியில் குதித்து தப்பி ஓடினார். சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை ஓடுபாதையில் சுற்றி வளைத்து பிடித்தனர். சிராய்ப்பு காயங்களுக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளித்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் விதத்தில் சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தால், சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சார்ஜாவில் இருந்து சென்னை வரும் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 3.25 மணிக்கு 217 பயணிகளுடன், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கி, ஓடு பாதையில் இருந்து டாக்ஸி வேயில் வந்து, அது நிற்க வேண்டிய ஃபே 25ல் நிற்பதற்கு தயாரானது. அப்போது விமானத்தில் பயணித்து வந்து கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் செரீப் (30) என்பவர், திடீரென விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் என்ற அவசரகால கதவை திறந்து, மின்னல் வேகத்தில் அதன் சரக்கு பாதை வழியாக வெளியில் குதித்து தப்பி ஓடினார்.

இதையடுத்து விமானத்திலும் சென்னை விமான நிலையத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் அவசரகால அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து, விமானத்தின் அவசரகால கதவு வழியாக வெளியில் குதித்து ஓடிய பயணி முகமதுவை சுற்றி வளைத்து பிடித்தனர். இதற்கிடையே அந்த ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் அது நிக்க வேண்டிய நடைமுறைக்கு வராமல், டாக்ஸி வேயில், நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் 284 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்குவதற்காக தயாரானது. டாக்ஸி வேயில், ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நின்று கொண்டு இருந்ததால் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

தொடர்ந்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதேபோல் ஓடும் விமானத்தில் இருந்து கீழே குதித்த புதுக்கோட்டை பயணி முகமதுவை, பாதுகாப்பு அதிகாரிகள் தனி அறையில் வைத்து துருவிதுருவி விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அந்த பயணி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுவதாக தெரிகிறது. ஆனால் அவர் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவரா, இல்லையேல் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரா என பல்வேறு கோணங்களில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து மீண்டும் சார்ஜாவுக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் இந்த சம்பவம் காரணமாக விமானம் தாமதமாக 7.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்து நேற்று அதிகாலை ஐந்து முப்பத்தைந்து மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம், காலை 9 மணி அளவில் லண்டன் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. அந்த பயணிக்கு அவசரகால கதவை திறந்து விமானத்திலிருந்து குதித்ததில் லேசான சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா காட்சியில் நடந்தது போல் சென்னை விமான நிலையத்தில் நேற்ற அதிகாலை நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : Chennai ,Air Arabian Airlines ,Sharjah ,
× RELATED தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி...