போச்சம்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் 3வது நாளாக போராட்டம்

போச்சம்பள்ளி, பிப்.26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போச்சம்பள்ளியில் 3வது நாளாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் திடீரென மறியலில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போச்சம்பள்ளி தாலுகா அலுவலகம் முன் நேற்று 3வது நாள் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தனியார் துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, திடீரென சாலை மறியலில் குதித்தனர். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் 21 பெண்கள் உள்பட 34 பேரை கைது செய்து, புளியம்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் போச்சம்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>