பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே ஆந்திராவில் இருந்து குட்கா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2,882 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்திச் செல்லப்படுவதாக நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நசரத்பேட்டை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு வேன்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தனர். அந்த வேன்களில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வாகனங்களை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோபால்(35), சென்னை போரூரைச் சேர்ந்த முத்துராஜ்(24), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(25) ஆகிய மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 2,882 கிலோ குட்கா மற்றும் இரண்டு வேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில், இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து குட்காவை கடத்தி வந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக வந்தபோது பிடிபட்டனர் என தெரிய வந்தது. போலீசாரின் விசாரணைக்கு பிறகு மூன்று பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
