போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் மாவட்டத்தில் 65 சதவீத பஸ்கள் இயங்கவில்லை

தர்மபுரி, பிப்.26: தர்மபுரி மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் ஸ்டிரைக் நேற்று தொடங்கியதால், 65 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெளியூர் செல்ல முடியாமல் தவித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் 343 அரசு நகர மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினசரி காலை 9 மணி நிலவரப்படி, 250 பஸ்கள் இயக்கப்பட்டு விடும். ஆனால் நேற்று 193 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதாவது காலையில் 70சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியதால், அரசு பஸ்கள் இயக்குவது படிப்படியாக குறைந்து, மாலையில் 35சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

65சதவீத பஸ்கள் இயக்கவில்லை. மதியம் வந்த பஸ்கள் அனைத்தும், இயக்காமல் அரசு பணிமனைகளில் நிறுத்தப்பட்டது. இதனால் தர்மபுரி நகர மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இல்லாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நேற்று முகூர்த்த நாள் என்பதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தனியார் பஸ்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. சேலம், பெங்களூரு, சென்னை, திருப்பத்தூர், அரூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு குறைந்த பஸ்களே இயக்கப்பட்டன.

இதனால் பஸ் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டத்தை பார்த்து, அதிகாரிகள் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தின் டிரைவர், கண்டக்டர்களை நியமித்து பஸ்களை இயக்கினர். இதுகுறித்து தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக தொமுச தலைவர் சின்னசாமி கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் 7 பணிமனைகளில் 300பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 64 பேர் மட்டுமே நேற்று பணிக்கு சென்றுள்ளனர். மற்றவர்கள் பணிக்கு செல்லவில்லை. நேற்று மாலை நிலவரப்படி, 65 சதவீத பஸ்கள் இயக்கவில்லை,’ என்றார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நேற்று முன்தினம் இரவு இயக்கிய பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களை கொண்டு நேற்று பஸ்கள் இயக்கப்பட்டது. நேற்று பிற்பகல் பணியை முடித்தவர்கள், பஸ்களை பணிமனையில் நிறுத்தி சென்றனர். டிரைவர், கண்டக்டர்கள் ஸ்டிரைக் தொடங்கியதால், இரவு நேர பாதுகாப்புக்காக அந்த பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. பஸ் ஸ்டிரைக்கையொட்டி பாதுகாப்பு கருதி பஸ்கள் இயக்குவது நேற்று மாலை குறைக்கப்பட்டது,’ என்றனர்.

Related Stories:

>