நாகர்கோவிலில் தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பல் பெண் படுகாயம்

நாகர்கோவில், பிப்.26: நாகர்கோவிலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பலாயின. பெண் ஒருவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே ஞானாய் தெரு உள்ளது. இங்கு கிறிஸ்டோபர் டேனியல் என்பவருக்கு சொந்தமாக 5 ஓட்டு வீடுகள் உள்ளன. ஒரே வரிசையில் உள்ள இந்த வீடுகளை அவர் வாடகைக்கு கொடுத்துள்ளார். இதில் வசந்தகுமாரி என்பவர் ஒரு வீட்டில் தனது மகனுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்குவதற்கு முன்னதாக கொசுவர்த்தி சுருள் ஒன்றை பற்ற வைத்துள்ளார். அப்போது அதில் இருந்து தீ அங்கு கிடந்த காகிதம், சாக்குபைகள் போன்றவற்றில் பிடித்துள்ளது.

 தீ வீட்டில் உள்ள பிற பொருட்களுக்கும் பரவியதுடன் அருகே உள்ள வீடுகளில் தீ பிடித்து எரிந்தது.  வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். இதில் கிறிஸ்டோபர் டானியல், அந்தோணிராஜ், வசந்தகுமாரி உட்பட 5 பேரின் வீடுகள் எரிந்து நாசமானது. வீட்டிலிருந்த டிவி, பிரிட்ஜ், கட்டில், மேசை துணிமணிகள், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 10 பவுன் நகை ஆகியவையும் எரிந்து நாசமாகியது. இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கு நேற்று அதிகாலை 3.45 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக வசந்தகுமாரி காலில் தீக்காயம் காயம் ஏற்பட்டது. தீ விபத்தில் வசந்தகுமாரி மற்றும் அவரது மகன் ஆகியோர் வீட்டில் சிக்கியுள்ளதாக முதலில் தகவல் பரவியிருந்தது. இருப்பினும் அவர்கள் வீட்டின் பின்பகுதி வழியாக அதிர்ஷ்டவசமாக வெளியேறி தப்பியுள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வசந்தகுமாரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரேஷ்ராஜன், விஜய் வசந்த் ஆறுதல்

தீ விபத்து நடந்த இடத்தை  குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ நேற்று காலை  பார்வையிட்டார்.  பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவுது உட்பட கட்சியினர் உடனிருந்தனர். இதனை போன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுசெயலாளர் விஜய்வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குடும்பத்தினரை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர். காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் உட்பட அக்கட்சியினர் உடனிருந்தனர்.

Related Stories: