குமரி மாவட்டத்தில் 60 சதவீத அரசு பஸ்கள் இயக்கம் கிராமப்புறங்களில் பொதுமக்கள் தவிப்பு

நாகர்கோவில், பிப்.26: போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்தம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடந்த ஒப்பந்தங்களில் ஒப்புக்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும்.

போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை அரசு நிதி தந்து ஈடுசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் அரசு தரப்பிலும், அமைச்சர்கள், அதிகாரிகள் தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்கவில்லை. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு இன்று 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன.

இந்தநிலையில் 24ம் தேதி இரவு தமிழக அரசால் இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இது தன்னிச்சையான முடிவு, தொழிற்சங்கங்களுடன் பேசி இந்த முடிவை அறிவிக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியதுடன் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச் எம் எஸ், ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், டி.டபிள்யூ.யு உள்ளிட்ட சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 35 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 8 மணி நிலவரப்படி 60 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன. நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை ஒன்றில் இருந்து 54 பஸ்களும், 2ல் இருந்து 68 பஸ்களும், 3ல் இருந்து 63 பஸ்களும் இயக்கப்பட்டதாக காலையில் அதிகாரிகள் தெரிவித்தனர். பஸ்களை இயக்க தற்காலிக பணியாளர்கள் (சிஎல்ஆர்) உள்ளிட்டோரும் தயார் நிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். நாகர்கோவில் ராணித்தோட்டம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

குமரி மாவட்டத்தில் 12 பணிமனைகளிலும் சேர்த்து மொத்தம் 850 பஸ்கள் இயக்கப்படுகின்ற நிலையில் வழக்கம்போல் அனைத்து பஸ்களையும் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பஸ்கள் முழுமையான எண்ணிக்கையில் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று காலை 7 மணி வரை பஸ்கள் இயக்கப்படாத நிலை கிராமங்களில் காணப்பட்டது.

Related Stories: