திங்கள்சந்தை வருகை ரத்து குமரியில் ராகுல்காந்தி சுற்றுப்பயணத்தில் மாற்றம்

திங்கள்சந்தை, பிப்.26: ராகுல்காந்தி திங்கள்சந்தை வருகை ரத்தானதால் இளைஞர் காங்கிரசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மார்ச் 1ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார். அப்போது இங்குள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்திக்கிறார். அவரது சுற்றுப்பயணம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் சில தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது அவர் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், தக்கலை, அழகியமண்டபம், திருவிதாங்கோடு வழியாக திங்கள்சந்தை, குளச்சல், கருங்கல், களியக்காவிளை செல்வதாக திட்டமிடப்பட்டது.

இதில் குளச்சல் சட்டமன்ற தொகுதியின் மையப்பகுதியான திங்கள்சந்தையில் அவர் பொதுமக்களை சந்திப்பார் என கூறப்பட்டது. இதையடுத்து அவரை வரவேற்கும் பணியில் சிறப்பான ஏற்பாடுகளை வட்டார காங்கிரசார், இளைஞர் காங்கிரசார் ஈடுபட்டு வந்தனர். திங்கள்சந்தையில் ராகுல் காந்தி பேசுகிறார் என குருந்தன்கோடு, முக்கலாம்பாடு, திங்கள்சந்தை, மயிலோடு, நெய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் போர்டுகள், போஸ்டர்கள் ஒட்டி விளம்பரங்கள் செய்திருந்தனர். மேலும் நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களை திரட்டும் பணியிலும் இளைஞர் காங்கிரசார் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் திடீரென, ராகுல் காந்தி சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி அவர் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், தக்கலை, முளகுமூடு, திக்கணங்கோடு வழியாக குளச்சல் செல்வார் என மாற்றியமைக்கப்பட்டது. இது ஏற்கனவே திங்கள்சந்தையில் பல ஆயிரம் செலவு செய்து ராகுல்காந்தியை வரவேற்க ஏற்பாடுகள் செய்து வந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தியிடம் முறையிடவும் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: