×

திருவேற்காட்டில் ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.59 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

ஆவடி: திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (38). தனியார் நிறுவன ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர், கடந்த ஓராண்டுக்கு முன் ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அப்புகாரில், எனது செல்போன் வாட்ஸ்-அப் எண் மூலம் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் அதிகளவு லாபம் பெறலாம் என்று மர்ம நபர்கள் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி, எனது வங்கி மூலம் அந்நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.59 லட்சத்தை ஆன்லைன் டிரேடிங் முதலீடாக அனுப்பி வைத்தேன். பின்னர் பல மாதங்களாகியும் அப்பணத்துக்கான லாபத்தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திகேயன் வலியுறுத்தியிருந்தார்.

இப்புகாரின்பேரில் ஆவடி காவல் ஆணையரக இணையவழி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த விஜயகார்த்திக் (26), திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தனியார் வங்கி மேலாளராக இருக்கும் மோனிஷ்ராஜ் (26) ஆகிய இருவரும் மோசடி நபர்களிடம் இருந்து அதிகளவு கமிஷன் தொகை பெறுவதற்காக, ஆன்லைன் டிரேடிங் மூலம் பொதுமக்களின் வங்கி கணக்குகளை பெற்று பணமோசடியில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை ஆன்லைன் டிரேடிங் மூலம் கார்த்திகேயனிடம் ரூ.59 லட்சம் பணமோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் மோனிஷ்ராஜ், விஜயகார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பணமோசடிக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Thiruvechat ,Avadi ,Karthikeyan ,Thiruvechad region ,Avadi Police Commissioner's Office ,
× RELATED கடையை உடைத்து கேரட் விதை திருடியவர் கைது