தேவணாம்பாளையம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பொள்ளாச்சி, பிப். 26:  பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம் தேவணாம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதற்காக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முயற்சியில், இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து திருப்பணிக்காக ரூ.58.68லட்சம் நிதி கோயிலுக்கு வழங்கப்பட்டது. கோயில் திருப்பணி அண்மையில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதன்பின், நவக்கிரக ஹோமம், கோமாதா பூஜையும் நடைபெற்றது.

மேலும், அங்குள்ள  விநாயகர் கோயிலிருந்து முளைப்பாலிகை, புற்றுமண், தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  நேற்று முன்தினம், காலையில் மூல மந்திரஹோமமும், மாலையில் யாக வேள்வியும், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சக்தி நிலை நிறுத்தல் பூஜையும் நடந்தது. இதையடுத்து நேற்று, மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவை மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை  ஆணையர் செந்தில் வேலவன், ஒன்றிய அதிமுக செயலாளர் திருஞானசம்பந்தம் மற்றும் ராதாமணி, துரை, அக்னீஸ் முகுந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், கும்பாபிஷேக விழாவையொட்டி சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>