போக்குவரத்து, டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி, பிப்.26: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் முன் அறிவிப்பு இல்லாமல் பணியை விட்டு செல்கிறீர்கள் என இன்வாய்ஸில் குறிப்பிட்டு போக்குவரத்து அதிகாரிகள் எழுதி கொடுத்ததை கண்டித்து ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வேண்டும். அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள், வழக்கமாக பணி முடிந்த பின் தங்கள் அலுவலகத்திற்கு சென்று பணம் கட்டும்போது இன்வாய்ஸில் முன் அறிவிப்பு இல்லாமல் பணியை விட்டு செல்கிறீர்கள் அதிகாரிகள் எழுதிக் கொடுத்துள்ளனர். முறையாக அறிவிப்பு செய்த பின்னரே போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், இதுபோன்று அதிகாரிகள் தவறான முறையில் இன்வாய்ஸில் எழுதிக் கொடுத்து உள்ளதாக கூறியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டியில் உள்ள போக்குவரத்து அலுவலக நுழைவுவாயில் முன் தரையில் அமர்ந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைத்தலைவர் இப்ராஹிம் தலைமை வகித்தார். இதில், அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்க ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: ஊட்டி மத்திய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, டாஸ்மாக்  ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்  ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில், கடந்த 18 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.  அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்பான பணி நிலைமையை ஏற்படுத்த வேண்டும். விற்பனை நேரம் குறைக்க வேண்டும். பாதுகாப்பற்ற கடைகளை மூட வேண்டும். வளர்ச்சி முறை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories:

>