நாடுகாணி சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை

கூடலூர், பிப்.26: கொரோனா  பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தடை செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த சில மாதமாக இ-பாஸ் அனுமதி பெற்று சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.கேரளாவில் புதிய வகை கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வரும் கேரளா சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கலெக்டர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கர்நாடகாவுக்குள் கேரள மாநிலத்தவர் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வர பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கேரள எல்லையில் உள்ள நாடுகாணி, சேரம்பாடி, தாளூர் நம்பியார் குண்ணு,  பாட்டவயல் உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லை வழியாக கேரளாவில் இருந்து வருபவர்களிடம் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை குறித்த முறையான ஆவணங்களைப் பரிசோதிப்பதோடு சளி மாதிரிகளையும் சேகரிக்கின்றனர். கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

Related Stories:

>