கோவை ராமநாதபுரத்தில் அமர்ந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு

கோவை, பிப்.26: கோவை ராமநாதபுரத்தில் உட்கார்ந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சுங்கம் பைபாஸ் இந்திராநகர் அருகே உட்கார்ந்த நிலையில் வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், அந்த வாலிபர் அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக வட மொழியில் பேசியவாறு சுற்றி திரிந்துள்ளார். மேலும் அவரது வலது கையில் ட்ரிப்ஸ் ஏற்றியதற்கான அடையாளம் உள்ளது.

அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கலாம் என தெரிகிறது. அதிக மதுபோதையில் அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க அவரின் விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், கோவை பீளமேடு காளப்பட்டி ரோட்டில் கிடந்த முதியவர் சடலத்தை போலீசார் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவரது பெயர் சம்பு (61) என்ற வடமாநில தொழிலாளி என்பது தெரியவந்தது. எப்படி இறந்தார்? உள்ளிட்ட மற்ற விவரங்கள் குறித்து பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>