போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் கோவையில் 60 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை

கோவை, பிப்.26: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் 60 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி கோவையில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களான எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் 1200 பேருந்துகள், கோவை கோட்டத்தில் 3 ஆயிரம் நகர பேருந்துகள் மற்றும் 1500 வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. சில பேருந்துகளை ஏ.பி.டி. தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் இயக்கினர். தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.

குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் நேற்று வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி புறப்படும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதன் காரணமாக கோவை உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் குறைந்தளவு அரசு பஸ்களே இயக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மண்டலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: