மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தக்கோரி பாடையுடன் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்ட 57 மாற்றுத்திறனாளிகள் கைது

திருவண்ணாமலை, பிப்.26: மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, பாடையுடன் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்ட 57 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை ₹3 ஆயிரமாக உயர்த்தக்கோரி கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த குடியேறும் போராட்டத்தில் கடந்த 23ம் தேதி ஈடுபட்டனர். எனவே, கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் விடுவித்தும், அங்கிருந்து வெளியேற மறுத்து, மண்டபத்திலேயே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சங்க நிர்வாகி ரமேஷ் தலைமையில் நேற்று திருவண்ணாமலை ரவுண்டானா பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று, அறிவொளி பூங்கா அருகே மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுடைய ேகாரிக்கையை நிறைவேற்ற மறுக்கும் தமிழக அரசை கண்டித்து, பாடை கட்டி ஊர்வலத்தில் கொண்டுவந்தனர். பின்னர், மறியல் போராட்டத்தின்போது, பாடையை சுற்றிலும் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

இந்த போராட்டத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்ட 57 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், உதவித்தொகையை உயர்த்துதல், தனியார் துறையில் 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு கொடியேந்தி இன்று போராட்டத்தில் ஈடுபட மாற்றுத்திறனாளிகள் திட்டமிட்டுள்ளனர். கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூரில் தாலுகா அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடனர். இதில், தாலுகா தலைவர் பி.திருமால், துணை தலைவர் எஸ்.கிருஸ்ணன், பொருளாளர் எஸ்.பி.முத்து உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆரணி: மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் 2வது நாளாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆரணி பழைய பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து தனியார் பள்ளியில் அடைத்தனர். நேற்றுமுன்தினம் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் பள்ளியில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் 2வது நாளாக 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியதையடுத்து கைது செய்யப்பட்டு தனியார் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளை போலீசார் விடுவித்தனர்.

Related Stories:

>