×

கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேற்கண்ட இடங்களுக்கு செல்வதற்கு, அந்தந்த சுற்றுலா தலங்களின் நுழைவாயிலில் கடந்த சில ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கியூஆர் கோடு முறையில் ஒரே முறை நுழைவு கட்டணம் வசூலிக்கும் வகையில், பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் வனத்துறையினர் டோல் அமைத்தனர். ஒரே முறை நுழைவு கட்டணத்தால் அப்பகுதியில் அடிக்கடி நெரிசல் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக நீண்ட வரிசையில் சுற்றுலா வாகனங்கள் காத்திருக்க நேர்வதால் உரிய நேரத்தில் சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகளுக்கு காண்பிக்க முடியாமல் உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் அவதியடைந்து வருவதாக புகார் எழுந்தது.

இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அந்தந்த சுற்றுலா தலங்களின் நுழைவு வாயிலில் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். கியூஆர் கோடு முறையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கு முன்பு அனைத்து சங்க சுற்றுலா வாகன ஓட்டிகள் 1,000க்கும் மேற்பட்டோர், ஆங்காங்கு வாகனங்களை நிறுத்தி, காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வனத்துறை அதிகாரிகள், அந்தந்த சுற்றுலா தலங்களின் நுழைவாயில் பகுதியில் கட்டணம் வசூல் செய்ய அடுத்த 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

10 நாட்களை கடந்தும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், நேற்று காலை 9 மணியளவில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் நுழைவாயிலில் உள்ள வனத்துறை சோதனை சாவடி, கோசன் ரோடு சோதனை சாவடி ஆகிய இரண்டு பகுதிகளிலும் தங்களது வாகனங்களுடன் சென்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சுற்றுலா தலங்களை காண முடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

* 2 நாள் இலவச அனுமதி: கலெக்டர்
மூஞ்சிக்கல் பகுதியில் நேற்று மதியம் 3 மணி முதல் 5 மணி வரை சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நடத்திய மறியல் போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் ெகாடைக்கானலுக்குள் வர முடியாமலும், ஊருக்கு செல்ல முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, ஆர்டிஓ, தாசில்தார், மாவட்ட வன அலுவலர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், திண்டுக்கல் கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் எளிதில் சென்று வருவதற்காக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் ஆகிய சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்றும், நாளையும் (மே 2, 3) கட்டணமின்றி இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Kodaikanal ,Dindigul district ,Guna Cave ,pine forests ,Moyer Square ,Berijam… ,
× RELATED மனைவிக்கு 3 பேருடன் கள்ளத்தொடர்பு...