நாகப்பட்டினம்: தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டினால் எச்சரிக்கும் ‘நவீன ஏர்ஷிப் கருவி’யை சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்கள் நாகப்பட்டினம் கடலில் நேற்று மாதிரி பரிசோதனை செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் முதல் வேதாரண்யம் வரை 23 மீனவ கிராமங்கள் உள்ளது. இங்கிருந்து ஆழ்கடல் செல்லும் மீனவர்கள் 4 முதல் 5 நாட்கள் வரை தங்கி மீன்கள் பிடித்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் செல்லும்போது எல்லை குறித்து அறிந்து கொள்ளவும், மீனவர்கள் தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் துல்லியமாக தொடர்பு கொள்ளும் வகையில் சென்னை பொறியியல் மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். மாணவர்கள் லோகேஸ்வரன், ஹரிகரன், பார்வதி, ஹரிகரமாதவன், ஸ்ரீகாந்த், சீனிவாசன், திலகம் பார்வதி நாதன், கற்பகநாதன், பிரெத்யும்னா, பரத் கண்ணா, ரவிக்குமார் ஆகியோர் தாங்கள் உருவாக்கியுள்ள ‘நவீன ஏர்ஷிப் கருவி’ யை ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலம் மாதிரி சோதனையை நாகப்பட்டினம் கடலில் மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: தமிழக மீனவர்கள் கடல் எல்லையை அறிந்துகொள்வது, அவசர காலங்களில் நடுக்கடலில் இருந்து கரைக்கு தொடர்பு கொள்வது போன்றவை இன்று வரை சவாலாக இருந்து வருகிறது. அதேபோல இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவலை தடுப்பது கடலோரக்காவல்படை மற்றும் கடற்படையினருக்கு சவாலாக உள்ளது. பொறியியல் மாணவர்களாகிய நாங்கள் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளோம். அலுமினியம் மற்றும் நெகிழி போன்ற பொருட்களால் விமானம் போன்ற ஏரோஷிப் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நிரப்பப்பட்டுள்ள ஹீலியம் வாயு மூலம் வானத்தில் பறந்து மேலே 20 கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும்.
விமானம் போன்ற அமைப்பு சூரிய சக்தியால் தொடர்ந்து இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உயர் சக்திமிக்க கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. வானத்தில் 20 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்படும் இந்த ஏரோஷிப் 200 கிலோ மீட்டர் சுற்றளவில் 24 மணி நேரமும் கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் சிறிய அசைவு இருந்தாலும், ஊடுருவல் இருந்தாலும் உடனடியாக அதற்கான படங்களை செயற்கைக்கோளுக்கும், தரையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் அனுப்பும். இதே போல் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டினால் அவர்களது செல்போன் எண்ணிற்கு எல்லை குறித்து எச்சரிக்கை வரும்.
தொடர்ந்து, எல்லை தாண்டியோ அல்லது இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் தமிழக மீனவர்கள் தரைப்பகுதியை தொடர்பு கொள்ளும் போது இந்த ஏர்ஷிப் கருவி மீனவர்களுக்கு உதவி செய்யும். இது மீனவர்களுக்கு மட்டுமின்றி கடலோர காவல்படை, கடற்படைக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்க கூடும். இதில் முதல்கட்டமாக நாகப்பட்டினம் நடுக்கடலில் வைத்து இந்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அது வெற்றியடைந்துள்ளது. இந்தத்திட்டத்துக்கு தமிழக அரசு, ஒன்றிய அரசு ஆதரவும் மற்றும் நிதி உதவியும் கொடுத்துள்ளது. இந்த மாதிரி பரிசோதனை வெற்றியடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக நாகப்பட்டினத்தில் தரை கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்மூலம் நாகப்பட்டினம் மீனவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
