கிராமப்புறங்களில் பயோகாஸ் ஊக்கப்படுத்தக்கோரி மாட்டு சாணம் தெளித்து விவசாயிகள் நூதன போராட்டம் செய்யாறில் நடந்தது

செய்யாறு, பிப்.26: கிராமப்புறங்களில் பயோகாஸ் ஊக்கப்படுத்த வேண்டும் என செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் முன் மாட்டு சாணம் தெளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அலுவலக வாயிலில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் வருகிற சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பயோ காஸ், பயோ டீசல் எத்தனால் திட்டங்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாட்டு சாணம் தெளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாய சங்க பிரதிநிதி புருஷோத்தமன் கூறுகையில், ‘கிராம பொருளாதாரம் உயர இயற்கை எரிவாயு சிலிண்டருக்கு மாறாக பயோகாஸ் உர தயாரிப்பு கலன் என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்ட நிதி மூலம் ₹10 ஆயிரம் வழங்க வேண்டும். இதனால் ஆண்டுக்கு ₹8,000 முதல் ₹10,000 வரை கிராமப்புற மக்கள் சேமிக்க முடியும். மேலும் 2006 முதல் 2015 வரை பயோ டீசல் தயாரிக்க காட்டாமணக்கு சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இவ்வகையில் சாகுபடி செய்து அறுவடைக்கு உள்ள விதைகளை அரசு கொள்முதல் செய்து வேளாண் துறை மூலம் பயோடீசல் தயாரிக்க வேண்டும். பெட்ரோல் எரிபொருள் மாற்றாக கரும்பில் இருந்து எத்தனால் தயாரிக்க விவசாயிகள் பங்களிப்பாக 2006ல் பெற்றுள்ள ₹5.60 கோடி நிதியுடன் மத்திய அரசு நிதி பெற்று எத்தனால் தயாரித்து மலிவு விலையில் எரிபொருள் வழங்கலாம். இதனால் மாசு கட்டுப்படும் அன்னிய செலாவணி மிச்சமாகும். பயோ காஸ், எத்தனால், பயோடீசல், திட்டங்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: