தண்டராம்பட்டு அருகே பரபரப்பு சவுண்டு சர்வீஸ் குடோனில் பயங்கர தீ

தண்டராம்பட்டு, பிப்.26: தண்டராம்பட்டு அருகே சவுண்டு சர்வீஸ் குடோனில் பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிவா(42), இவர் அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் ஷாமியானா பந்தல், சமையல் பாத்திரங்கள், சேர்கள் வாடகை விடுதல், விழா மற்றும் அரசியல் பொதுக்கூட்ட மேடைகள் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இதனால் தனது வீட்டின் அருகே சிறிய அளவிலான குடோன் கட்டி பல்வேறு பொருட்களை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சவுண்டு சர்வீஸ் குடோனுக்குள் இருந்த பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிவா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஓடி வந்து கடையில் இருந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தண்டராம்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வருவதற்குள் ஏர்கூலர் மெஷின், பந்தல் துணி, சேர்கள் உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. இவற்றின் மதிப்பு ₹10 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இதுகுறித்து தானிப்பாடி போலீசில் சிவா புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் விஏஓ காஞ்சனா ஆகியோர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>