×

ஈரோடு மாவட்டத்தில் 30 சதவீத பஸ்கள் ஓடவில்லை

ஈரோடு,பிப்.26:போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தினால், ஈரோடு மாவட்டத்தில் நேற்று 30சதவீத பஸ்கள் இயக்கப்பட வில்லை என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 14வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கி, உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட 9 போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 30சதவீத பஸ்கள் இயக்கப்பட வில்லை. இதன்காரணமாக வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து போக்குவரத்து கழக ஈரோடு மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஈரோடு மண்டலத்தில், ஈரோடு காசிபாளையம், அந்தியூர், கோபி, நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி, பவானி, பள்ளிபாளையம் உட்பட 13 கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் இருந்து தினந்தோறும் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில், 60 சதவீத பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கும், 40 சதவீத பஸ்கள் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டத்தின் சுற்றுப்புறப்பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக நேற்று மாவட்டத்தில் 30சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும், அண்ணா தொழிற்சங்கத்தினர், மற்றும் தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Erode district ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!