பணி நிரந்தரம் செய்ய கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,பிப்.26: ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் கோபால் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர் பாண்டியன், எல்.எல்.எப். சங்க செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொ.மு.ச. மாவட்ட தலைவர் தங்கமுத்து கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். டாஸ்மாக் விற்பனை நேரம் குறைக்க வேண்டும். ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி, பாதுகாப்பற்ற கடைகளை மூட வேண்டும். சுழற்சி முறையில் பணியிட மாறுதல் செய்ய வேண்டும். ஊழியர்களை தொடர்ந்து தாக்கும் சமூக விரோதிகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சின்னசாமி, சி.ஐ.டி.யு. சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தை கட்சியின் பொறியாளர் பிரிவு மாநில துணை தலைவர் எஸ்.எம்.சாதிக், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் அரங்கமுதல்வன், ஏ.ஐ.டி.யு.சி. பெருமாள், எல்.எல்.எப். வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.

Related Stories: