×

கூலியை உயர்த்தி வழங்க கோரி கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

ஈரோடு,பிப்.26:  ஈரோடு பவானி ரோட்டில் உள்ள கைத்தறி உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தின் முன் ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தினர்(ஏ.ஐ.டி.யு.சி) நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்க மாவட்ட தலைவர் சித்தையன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கந்தசாமி, ஒன்றிய தலைவர் கண்ணுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிற்பு அழைப்பாளராக ஏ.ஐ.டி.யு. மாநில செயலாளர் சின்னசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதில், தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் ரூ.2ஆயிரத்தை நிபந்தனையின்றி அனைத்து நெசவாளர்களுக்கும் வழங்க வேண்டும். நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் உள்ள கைத்தறி நெசவாளர்களின் அடிப்படை கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியத்தை மாதம் ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நெசவாளர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்களுக்கு வேலை செய்ய தேவையான நூல் வழங்க வேண்டும்.

கைத்தறி ரக ஒதுக்கீட்டினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சோலாப்பூர் விசைத்தறி ஜமுக்காளத்தை கைத்தறி ஜமுக்காளம் என கூறி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிவகிரி தலைவர் ரணதிவே, மாவட்ட பொதுசெயலாளர் வரதராஜன், துணை செயலாளர் சண்முகம், பொருளாளர் பொன்னுசாமி, சென்னிமலை ஒன்றிய செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் 2,035 பேர் வீடுகளில் தனிமை