×

அரசு பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொதுமக்கள் கடும் அவதி; தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதல்

வேலூர், பிப்.26: வேலூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. மிக குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயங்கியதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழக அரச போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச்சுமை குறைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை பல நாட்களாக நிர்வாகத்திடம் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனையடுத்து ஊதிய உயர்வு, பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் 9 போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் கலந்து கொண்டன.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. வேலூர் கொணவட்டம், கிருஷ்ணா நகர் பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் மொத்தம் 50 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இருப்பினும் கிராமம், நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் முழுவதும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பஸ் நிலையங்கள், பணிமனைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்காததால் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. படிக்கட்டுகளில் தொங்கியபடி பலர் சென்றனர். ஆனால் கிராமங்கள் மற்றும் தொலை தூரத்தில் இருந்து செல்லும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் நேற்று பள்ளி, கல்லூரிக்கு செல்லவில்லை. ஆட்டோக்களில் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து வேலூர் மண்டல தொமுச நிர்வாக பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘வேலூர் மண்டலத்தில் மொத்தம் 700 அரசு பஸ்கள் உள்ளன. அதிமுக தொழிற்சங்கத்தை தவிர்த்து மற்ற அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். ஒவ்வொரு பணிமனையில் இருந்தும் 5 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றனர். எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்' என்றார். கேப்சன்.. அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வேலூர் கிருஷ்ணாநகர் பணிமனையில் நிறுத்தி வைக்கப்படுள்ள பஸ்கள். அடுத்த படம்: அரசு பஸ்கள் இயக்காததால் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பணிக்கு செல்வோர்,பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனியார் டவுன் பஸ்சில் முண்டியடித்து ஏறினர்.

Tags :
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...