உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக்கை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு- பரபரப்பு

உளுந்தூர்பேட்டை, பிப். 26:  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும்  இடத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த கடையை மூட வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி  எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.  50 பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் முழக்கமிட்டப்படி டாஸ்மாக் கடையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் டாஸ்மாக் கடை நுழைவு வாயில் பகுதியில் பேரிகார்டுகளை போட்டு தடுத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தள்ளிக்கொண்டு செல்ல முயன்றதால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அனைவரும் புல்லூர் குறுக்கு ரோட்டில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மங்கலம்பேட்டை-  திருச்சி ரோடு இணைப்பு சாலையில் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், டிஎஸ்பி விஜிகுமார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories:

>