விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

விருத்தாசலம், பிப்.26: விருத்தாசலத்தில் சுமார் 2ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த பிரசித்திப்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் வழிபட்டால் பல கோயில்களில் கிடைக்கும் வரங்களை இந்த ஒரே கோயிலில் பெறலாம் என்பது ஐதீகம். இந்த கோயிலில் மாசிமக பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 12 நாட்கள் நடைபெறும் மாசிமகத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு தினமும் பஞ்ச மூர்த்திகள் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகின்றது. கடந்த 22ம் தேதி 6ம் நாள் திருவிழாவில் கோயிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடந்தது.

முன்னதாக விநாயகர், சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விருத்தகிரீஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்திகளும் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களிலும் எழுந்தருளினர். பின்னர் விநாயகர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் எழுந்தருளிய தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு கோட்டைகளையும் வலம் வந்து நிலையை அடைந்ததும், விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேரும், விருத்தாம்பிகை அம்மன் எழுந்தருளிய தேரும் சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று நான்கு கோட்டைகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories:

>