வங்கியில் தீ விபத்து

தண்டையார்பேட்டை, பிப்.26: புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இங்கு ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். வாடிக்கையாளர்களும் பல்வேறு பணிகளுக்காக வந்து இருந்தனர். அப்போது, திடீரென வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் வங்கியில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த ஆவணங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீவிபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>