18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு

சென்னை, பிப். 26: 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில்  18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தில் கருப்பு உடை அணிந்து குடும்பத்தோடு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க தலைவர் அம்சராஜ் தலைமையில் 800க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்களை நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்துக்கு உள்ளே விடாமல் போலீசார் தடுத்தனர். மேலும் முதன்மை இயக்குனர் கோதண்டராமன் புகார் அளித்துள்ளார். எனவே உங்களை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் சாலை பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். தொடர்ந்து அவர்கள் 800 பேரை கைது செய்த போலீசார் சின்னமலை சர்ச் பின்புறம் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். ஆனால், அவர்கள் அங்கேயே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

Related Stories: