×

2022ஆம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை புது உச்சம்: பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா?

புதுடெல்லி: சர்வதேசச் சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரு பேரல் 126 டாலரை தாண்டியது. 2022ம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு உச்சம் தொடுவது இதுவே முதல் முறை. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையோன போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. ஈரான் – அமெரிக்கா இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், கடந்த 26ம் தேதி நடப்பதாக இருந்த 2ம் கட்ட பேச்சு வார்த்தையும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால் கச்சா எண்ணெய் சப்ளையும் தடைபட்டு விட்டது. அமெரிக்காவின் தொடர் மிரட்டல், நிர்ப்பந்தங்களுக்கு ஈரான் அடிபணியவில்லை. இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்பின் அழுத்தம் காரணமாக போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையும் குறைந்துவிட்டது. மேலும், ஈரான் துறைமுக வழிகளை கப்பல்கள் மூலம் அமெரிக்கா முடக்கியுள்ளது. இது மேலும் ஒரு மாதம் நீடிக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக சர்வதேசச் சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று பேரல் 126.31 டாலரை தொட்டது. இது 2022ல் ரஷ்யா – உக்ரைன் போர் காலத்தில் ஏற்பட்ட உயர்வுக்கு பிறகான புதிய உச்சமாகும். பின்னர் கச்சா எண்ணெய் விலை பேரல் 114 டாலராக குறைந்தது. எனினும், பதற்றம் நீடித்தால் இது பேரல் 150 டாலரை எட்டக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

ஏற்கெனவே கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்வதால் இழப்பு ஏற்படுவதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. மேலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் தொடர்ந்து சரிந்து 95 ரூபாயை நெருங்கி விட்டது எனவே, இந்த நிலை தொடர்ந்தால் இந்தியச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.

* பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த உத்தரவு உண்மையல்ல
மேற்கு ஆசியா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 126 டாலராக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.14க்கும், டீசல் ரூ.18க்கும் நஷ்டத்தில் விற்பதால் கடும் இழப்பை சந்திப்பதாக கூறப்படுகிறது. எனவே, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தக் கூடும் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன.

இதற்கிடையே, பெட்ரோல் லிட்டர் ரூ.10ம், டீசல் ரூ.12.50ம் விலை உயர்த்தப்படுவதாக ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் புகைப்படம் பரவியது. இது போலியானது என கூறப்பட்டுள்ளது. மக்கள் துல்லியமான தகவல்களுக்கு சரிபார்க்கப்பட்ட அரசு தரப்பு தகவல்களை மட்டுமே நம்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : New Delhi ,Iran ,America, ,Israel… ,
× RELATED பெங்களூரு அரசு மருத்துவமனை...