போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காஞ்சி, செங்கை மாவட்டங்களில் குறைவான பஸ்களே இயக்கம்: வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமம்

காஞ்சிபுரம், பிப்.26: ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தால், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு எற்படவில்லை. இதையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன்படி, நேற்று தங்களது போராட்டத்தை தொடங்கினர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், இந்து மஸ்தூர் சபா உள்பட 9 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஓரிக்கை, தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 726 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தால், நேற்று முன்தினம் இரவே பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேலும் நேற்று காலை 8 மணி வரை பஸ்கள் இயக்காததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். காலை 8 மணிக்கு பிறகு காஞ்சிபுரம் மற்றும் ஓரிக்கை பணிமனையில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, புதுச்சேரி, பெங்களூரு, வேலூர், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அடைந்தனர். கொரோனா பொதுமுடக்க தளர்வுகளுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: தொமுச, சிஐடியூ, இந்து மஸ்தூர் சபா உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள், நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், செங்கல்பட்டு பணிமனையில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், திருப்போரூர், திருப்பதி, மதுராந்தகம், சென்னை உள்பட பல பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் பாதிப்படைந்தனர். ஒரு சில பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

Related Stories:

>