குடியிருப்புகளுக்கு பாதிப்பால் நான்கு வழிச்சாலைக்கு பொது மக்கள் எதிர்ப்பு திரும்பி சென்ற அதிகாரிகள்

காரைக்குடி, பிப்.26: காரைக்குடி அருகே நான்கு வழிச்சாலைக்கு குடியிருப்புகள் இடிக்கப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், டிஆர்ஓ தலைமையில் சர்வே செய்ய வந்த அதிகாரிகள் திரும்பி சென்றனர். காரைக்குடி முதல் மேலூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு என நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் காரைக்குடி அருகே பாதரக்குடி பகுதியில் சாலை பணியால் 57 வீடுகள் இடிக்கப்படும் நிலை உள்ளது. இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று டிஆர்ஓ லதா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் மீண்டும் சர்வே செய்வதற்காக வந்திருந்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சர்வே செய்ய விடாமல் தடுத்து திரும்பி அனுப்பினர். அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை பணிக்காக குடியிருப்புகளை அழிப்பது கண்டிக்கத்தக்கது. குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர சாலை பணியால் கண்மாய், விவசாய நிலங்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை கைவிட்டு நீர்நிலைகள், விளைநிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சர்வே செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories:

>