திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் நாளை மாசி தெப்ப உற்சவம்

திருப்புத்தூர், பிப்.26: திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை மாசி மக தெப்ப உற்சவம் நடக்கிறது. இதனையடுத்து வெளியூர்களில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி தெப்ப உற்சவம் விழா சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்சவத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அருகில் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இதில் முக்கிய நிகழ்வாக கோயில் உட்பிரகாரத்திலும், தெப்ப குளத்தை சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இந்தாண்டிற்கான விழா கடந்த பிப்.18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 6ம் நாளான பிப்.23ல் இரவு திருவீதி புறப்பாடும், ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும் நடைபெற்றது. 7ம் நாளான பிப்.24ம் தேதி சுவாமி சூர்ணாபிஷேகம், தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. 8ம் நாளான நேற்று காலை சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு தங்ககுதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெற்றன.

9ம் திருநாளான இன்று பிப்.26ம் தேதி காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், பின்னர் பகல் 12.50 மணியளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறுகிறது. இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அன்னவாகனத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறும். 10ம் திருநாளான நாளை காலையில் தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் 11.30 மணியளவில் பகல் தெப்பம் கண்டருளலும் நடைபெறும். இரவு இரவு 9 மணியளவில் பெருமாள் தேவி, பூமிதேவியாருடன் மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், தெப்ப குளத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Related Stories: