×

சம்பா நெல் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்

கொள்ளிடம், ஏப். 30: கடந்த 2025ம் ஆண்டு சம்பா நெற்பயிருக்கான காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று கடைமடை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி காவிரி பாசனத்தின் கடைமடை பகுதியாக இருந்து வருகிறது. இப்பகுதியில் சுமார் 12,000 எக்டேர் நிலப்பரப்பில் குறுவையும், 20 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் சம்பா நெற்பயிரும் பயிரிடப்பட்டு வருகிறது.

கடந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடைமடை பகுதியை வந்தடைந்தது. ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தது போல் தொடர்ந்து மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து இல்லாமல் போனதால் கடைமடை பகுதிக்கும் பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேர முடியாமல் பிறகு காலம் தாழ்த்தி வந்து சேர்ந்தது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் காலம் தாழ்த்தியும் நெற்பயிரை சிறப்பாக சாகுபடி செய்தனர்.

சம்பா நெற்பயிர் மிகவும் சிறப்பாக சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் கன மழை மற்றும் டிட்வா புயலினால் நெற்பயிற் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். விவசாயிகளின் கோரிக்கைய ஏற்று மத்திய குழு மற்றும் மாநில அரசு அதிகாரிகள் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உரிய நடவடிக்கையால் டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதே 2025 ஆம் ஆண்டு சம்பா நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர். அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவதாக உறுதியளித்தனர்.

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிக்குள் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் இதுவரை வழங்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சம்பா நெற்பயிருக்கான காப்பீட்டு தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து கடைமடை பகுதி விவசாயிகள் சார்பில் பிரதான தெற்கு ராஜன் வாய்க்கால் பாசனதாரர் சங்க நிறுவனர் செந்தில்குமார் தெரிவித்தார்.

 

Tags : Kollidam ,Kadamada ,Mayiladuthurai district ,Cauvery ,
× RELATED குலசை கோயில் வருஷாபிஷேக விழா