சென்னை: நடிகர் பார்த்திபன் தனக்கு ஜாதி, மதமற்றவர் என்று சான்று வழங்க கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சான்று வழங்குமாறு சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில், நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி, மதம் சாராதவர் என்று சோழிங்கநல்லூர் தாசில்தார் சான்று வழங்கியுள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜரான நடிகர் பார்த்திபன், அர்த்தமுள்ள ஒரு சமுதாயம் உருவாக வழி செய்துள்ளதற்கு நன்றி என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த நீதிபதி, ஜாதி, மதம் சாராதவர் என்பதை தெரிவிக்க சான்றிதழ் பெறவேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்று சான்று வழங்க தாசில்தாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த சான்று விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும். உண்மையில் ஜாதி மதமற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்.
அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை. ஜாதி மத மற்றவர் என சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.அதற்கு நடிகர் பார்த்திபன், நல்லவர் என்று கூறுவதற்கு கூட சான்றிதழ் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.இதையடுத்து, நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் வழங்கப்பட்டதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அவரது வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
