ஆவின் பணி நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி

மதுரை, பிப்.26: மதுரை ஆவின் பணி நியமனத்தை எதிர்த்த மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது. மதுரையை சேர்ந்த கணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆவினில் சுமார் 62 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. பல முறைகேடுகள் நடந்துள்ளன. பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக பலரை நியமித்துள்ளனர். முறையாக தேர்வு நடத்தப்படவில்லை. இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மதுரை ஆவினில் காலிப் பணியிடங்களை நிரப்ப முறையாக அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பித்தோர் பெயர் மற்றும் தேர்வுக்கான ஆன்சர் கீ ஆகியவற்றை வெளியிட்டு, தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்த பிறகே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், வக்கீல் மாரீஸ்குமார் ஆஜராகி, முறையாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டு ஜன.8ல் தேர்வானோர் பணியில் சேர்ந்துவிட்டனர். பணம் கேட்டு மிரட்டியதாக மனுதாரர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றனர். இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவை பொது நல மனுவாக ஏற்க முடியாது என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Related Stories: