மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000 வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்

திருவெறும்பூர், பிப்.25: திருச்சி, திருவெறும்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 170 பேரை போலீசார் கைது செய்தனர். மாற்றுதிறனாளிகளுக்கு அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்குவதுபோல் மாதாந்திர உதவித்தொகை 3,000 ரூபாய் தமிழகத்திலும் வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு உதவி தொகையை ரூ.5ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கடந்த 10ம் தேதி போராட்டம் நடத்தினர்.

இரண்டாம் கட்ட போராட்டமாக நேற்றுமுன்தினம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் தொடங்கியது. அதிகாரிகள் யாரும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது. நேற்று காலை அவர்கள் திருவெறும்பூர் பஸ்ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 75 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர் கோபிநாத், மாநில துணை செயலாளர் புஷ்பநாதன், மாவட்ட தலைவர் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 70 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>