5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

வலங்கைமான், பிப்.25: தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கத்தினர் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும். கிராம உதவியாளர் மத்திய அரசுக்கு இணையான போனஸாக ரூ.7,000 வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். பதவி உயர்வு பெற்ற கிராம உதவியாளர் ஓய்வூதிய குறைபாடுகளை களைந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதில் முதல் கட்டமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஊழியரிடம் ரத்த கையெழுத்து போராட்டத்தை நடத்தினர். அதனை அடுத்து மூன்றாவது கட்ட போராட்டமான காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று முதல் துவங்கி நடத்தி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் வட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் தருமையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயகுமார், முத்துவேல் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் குமார் நன்றி கூறினார்.

Related Stories:

>