அறந்தாங்கி அருகே எருக்கலக்கோட்டையில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சடலத்தை எடுக்காமல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சமரசம்

அறந்தாங்கி, பிப்.25: அறந்தாங்கி அடுத்த எருக்கலக்கோட்டை கிராமத்தில் ராஜாங்கம் என்பவரது வீட்டில் இருந்து செல்லும் பாதை தொடர்பாக, அறந்தாங்கி சப்-கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜாங்கம் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சடலத்தை எடுத்துச் செல்லும் பாதையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த பாதை வழியாக சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, ராஜாங்கத்தின் சடலத்தை எடுக்காமல் வீட்டிலேயே வைத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், பிடிஓ அரசமணி, ஒன்றியக் கவுன்சிலர் செந்தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் இந்திராமுத்துராமன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ராஜாங்கத்தின் உறவினர்களிடம் பிரச்னைக்குரிய பாதை தொடர்பான வழக்கு அறந்தாங்கி சப்-கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் முடிவை பொறுத்து, வருவாய்த்துறையும், ஊரக வளர்ச்சித்துறையும் நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து சடலம் மாற்றுப்பாதையில் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: