400 காலி பணியிடங்களுக்கு கால்நடை உதவியாளர் நேர்முக தேர்வு

நாகை, பிப். 25: நாகையில் நடந்த கால்நடை உதவியாளர் நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள், மாட்டை துன்புறுத்தியதால் விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாகை கால்நடைத்துறை மண்டல அலுவலகத்தில் கால்நடை உதவியாளர் நேர்முக தேர்வு நேற்று துவங்கியது. 400 காலி பணியிடங்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கு நேற்று துவங்கிய நேர்முக தேர்வு நாளை (26ம் தேதி) வரை 3 நாட்கள் நடக்கிறது. நேர்முக தேர்வில் பங்கேற்போரிடம் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் களப்பணியாக கால்நடையின் பற்கள் மற்றும் பால் சுரக்கும் மடி, கால்கள் என சில பாகங்களை பிடித்து பார்க்க வேண்டும். அவ்வாறு கால்நடைகளை பிடித்து பார்க்கும் தேர்வாளர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு பணிக்கு நியமனம் செய்யப்படுவர். இதன்படி நேற்று துவங்கிய நேர்முக தேர்வில் பங்கேற்றவர்களுக்க களப்பணி என்ற வகையில் அங்கிருந்த ஒரு பசுமாட்டின் வாய் மற்றும் பால் சுரக்கும் மடி ஆகியவற்றை பலர் பல மணி நேரமாக பிடித்து பார்த்து அதிகாரிகளிடம் காண்பித்தனர்.

இதுகுறித்து விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறும்போது, தெருவில் சுற்றி திரியும் நாய்களை துன்புறுத்தினால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த நேரத்தில் ஒரே ஒரு பசுமாட்டை தேர்வுக்கு கொண்டு வந்து தேர்வில் பங்கேற்றவர்கள் வாயை திறந்து பற்களை பிடித்து காட்டியும், பால் சுரக்கும் மடியை பிடித்து இழுத்தும் துன்புறுத்தியுள்ளனர். தேர்வில் இதுபோல் களப்பணி செய்ய வேண்டுமென அதிகாரிகள் நினைத்தால் நிறைய மாடுகளை கொண்டு வந்திருக்க வேண்டும். ஒரு மாட்டை அலுவலகத்துக்கு கொண்டு வந்து இப்படி செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த செயலுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றனர்.

Related Stories: