குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 கேட்டு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை, பிப். 25: கிராம உதவியாளருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகை தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் பாட்சா தலைமை வகித்தார். வட்ட துணைத்தலைவர் செல்வமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் யுவராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் உமா, ராணி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் கலியபெருமாள் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தர் ஊதியம் வழங்கியதுபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்ற அடிப்படையில் சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து அலுவலக ஊழியர்களுக்கு இணையான ரூ.15,700 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். பதவி உயர்வு பெற்ற கிராம உதவியாளர்களின் ஓய்வூதிய குறைபாடுகளை அகற்ற வேண்டும்.

பதவி உயர்வு பெற்ற கிராம உதவியாளர்களின் ஓய்வூதிய குறைபாடுகளை களைந்து 100 சதவீதம் பென்சன் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களின் விஏஓ பதவி உயர்வு காலத்தை 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டாக குறைக்க வேண்டும். கிராம உதவியாளர்களின் பணி நியமன கல்வி தகுதி 5ம் வகுப்பு தேர்ச்சி என்பதை 8ம் வகுப்பு தேர்ச்சியென உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வட்ட செயலாளர் மாதவன் நன்றி கூறினார். வேதாரண்யம்: வேதாரண்யம் பழைய தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் அறிவானந்தம் தலைமை வகித்தார். மேலும் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: