×

எலந்தலப்பட்டியில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் சிலிண்டர் வெடித்து சிதறியது: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு

பாடாலூர்,ஏப்.29: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா எலந்தலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர். குடும்பத்தினருடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அதன் அருகே சமையல் செய்வதற்கென்று ஓட்டு வீடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கியாஸ் சிலிண்டர் புக் செய்து, வீட்டில் வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டது.

இதில், அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, ஓட்டு வீடு தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மற்றும் உப்பிலியபுரம் தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டு வீட்டில் தீ பிடித்து எரிந்ததில், சிலிண்டர் வெடித்து சிதறியிருப்பது தெரியவந்தது.

தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அதிக வெயில் அல்லது மின் கசிவால் விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லை என்பதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : Elanthalapatti ,Patalur ,Rajendran ,Alathur taluka ,Perambalur district ,
× RELATED ராமேஸ்வரத்தில் பரபரப்பு பற்றி எரிந்தது படகு