சேலம் ஜருகுமலையில் தொடரும் அவலம் பழுதடைந்த கட்டிடத்தில் அரசுப்பள்ளி

சேலம், பிப்.25: ஜருகு மலையில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளியின் கட்டிடம் பழுதடைந்தது வருகிறது. புதியதாக கட்டிடம் கட்டி, பள்ளியின் தரத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ்மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மையப்பகுதியில் இருந்து தெற்கே நீண்ட ெதாடரான ஜருகுமலை உள்ளது. இம்மலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். சிலர் கூலி தொழிலுக்கு சென்று வருகின்றனர். ஜருகுமலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும்  ஒரே கட்டிடத்தில் அமர வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு இரு கட்டிடம் உள்ளது. ஒரு கட்டிடம் ஆஸ்பெட்டாஸ் கூரையாலும், மற்றொரு கட்டிடம் தார்சு கட்டிடமாகவும் உள்ளது. இதில் ஆஸ்ெபட்டாஸ் கூரையால் வேயப்பட்ட கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அதேபோல் தார்சு கட்டிடமும் மோசமாகி வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவு சமைக்க தனி கட்டிடம் இல்லை. திறந்த வெளியில் தான் சத்துணவு சமைக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் இயற்கை உபாதையை போக்குவதற்கான கழிப்பிட கட்டிடம் இல்லை. மாணவ, மாணவிகள் மறைவான இடத்திற்கு சென்று தான் இயற்கை உபாதை கழித்து வருகின்றனர். எனவே இங்கு பழுதான கட்டிடத்தை இடித்துவிட்டு, புதியதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் அல்லது விசாலமான இடத்தில் பெரிய அளவில் கட்டிடம், சமையல் அறை, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து ஜருகுமலை மலைவாழ் மக்கள் கூறியதாவது: ஜருகுமலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே கருங்கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தில் தான் பள்ளி இயங்கி வந்தது. பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என்று மலைவாழ்மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல ஆண்டாக கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 2006ம் ஆண்டு ₹ 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தார்சு கட்டிடம் கட்டப்பட்டது.தற்போது இந்த கட்டிடத்தில் தான் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த இடம் போதுமானதாக இல்லை. மேலும் சமையல் கூடம், கழிப்பிட வசதி இல்லாமல் உள்ளது. மாணவ, மாணவகளின் சிரமத்தை போக்க ஜருகு மலையிலேயே விலாசமான இடத்தில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தான் உள்ளது. ஒன்பதாம் வகுப்புக்கு  மேல் மாணவ, மாணவிகள் படிக்க வேண்டும் என்றால் அடிவாரத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியின் தரத்தை உயர்த்தி, பத்தாம் வகுப்பு வரை கொண்டு வரவேண்டும். இவ்வாறு மலைவாழ் மக்கள் கூறினர்.

Related Stories: