5 மாநில தேர்தல் முடியும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்த்தப்படுகிறதா? ஒன்றிய அரசு அதிகாரி மறுப்பு

புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்றுடன் முடிவடையும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தப் போவதாக வெளியான ஊகங்களை அதிகாரி மறுத்துள்ளார். மேற்கு ஆசியா போர் காரணமாக கடந்த 2 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4வது ஆண்டாக மாற்றமின்றி நீடித்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாததால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி ரூ.2,400 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்ததும், பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேற்கு வங்கத்தில் 2வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிய உள்ளதால், இன்று மாலையிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என யூகிக்கப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்தப்படலாம் என பொருளாதார நிபுணர்களும் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா நேற்று அளித்த பேட்டியில், ‘‘பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் இல்லை. சில இடங்களில் மக்கள் பதற்றத்துடன் எரிபொருளை வாங்கி சேமிப்பதை கவனித்துள்ளோம். எனவே, பெட்ரோல் பங்க்களில் போதிய இருப்பு இருப்பதை உறுதி செய்யவும், எரிபொருள் தீர்ந்துபோகும் நிலை ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களிடம் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவை போதுமான இருப்பு உள்ளது. இவற்றின் விலையிலும் எந்த உயர்வும் செய்யப்படவில்லை. எனவே வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பதற்றத்துடன் எரிபொருளை வாங்கி சேமிப்பதை தவிர்த்து, அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டும் நம்புங்கள்’’ என்றார். சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 70 டாலராக இருந்த நிலையில் தற்போது 114 டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: