ஓமலூர் அரசு மருத்துவர்கள் சாதனை

ஓமலூர், பிப்.25: ஓமலூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பக்தவச்சலம் மனைவி தையல்நாயகி(65). இவர், வழுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்யாத நிலையில் மீண்டும் கீழே விழுந்ததில் மற்றொரு பக்கத்திலும் மூட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவர் நடக்க முடியாமல் தவித்து வந்தார். தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என கூறியதால், அவரால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியவில்லை.

இந்நிலையில், ஓமலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின்பு எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு மருத்துவர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான மருத்துவர்கள் சுரேஷ்குமார், ஒபிலி விஜயசங்கர் ஆகியோர் தையல்நாயகிக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். முதலில் இடது மூட்டிலும், 5 நாள் கழித்து வலது மூட்டிலும் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். கடந்த 6 மாதமாக நடக்க முடியாமல் தவித்து வந்த தையல்நாயகி, அறுவை சிகிச்சைக்கு பின்பு யாருடைய உதவியும் இன்றி நடக்கிறார். இதுகுறித்து மருத்துவ அலுவலர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஓமலூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. தாலுக்கா அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பின் இரண்டு மூட்டுகளிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது இதுவே முதல் முறை என்றார்.   

Related Stories: