தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் யாருக்கு வெற்றி? இன்று மாலை 6 மணிக்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவதால் பரபரப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்க மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்துள்ளது. மேற்குவங்க சட்டசபை தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. தமிழ்நாடு, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்து விட்டது.

இதில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் 3,800க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 84.69 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் 126 தொகுதிகளில் 789 வேட்பாளர்கள் களம் கண்டனர், அங்கு 85.64 சதவீத வாக்குகள் பதிவானது. கேரளாவில் 140 தொகுதிகளில் 985 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 78.23 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 366 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் மிக அதிகபட்சமாக 89.87 சதவீத வாக்குகளும் பதிவாகின.

தேர்தல் ஆணைய உத்தரவின்படி, அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடியும் வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்த பின்னரே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 4ம் தேதி 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும் கூட, இன்று மாலை வெளியாகும் கருத்துக் கணிப்பு முடிவுகளும் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் 5 மாநிலங்களிலும் எந்தெந்த கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.

Related Stories: