அதிகாரியிடம் அராஜகம் செய்த வழக்கில் மகாராஷ்டிரா அமைச்சருக்கு ஒரு மாத சிறை தண்டனை

மும்பை: ஒன்றிய அரசு அதிகாரி மீது சேற்று தண்ணீரை ஊற்றி அராஜகத்தில் ஈடுபட்ட வழக்கில் மகாராஷ்டிரா பாஜ அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு சிந்துதுர்க் கோர்ட் ஒரு மாத சிறை தண்டனை விதித்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ கட்சியைச் சேர்ந்த மாநில மீன் வளத்துறை அமைச்சர் நிதேஷ் ராணே. இவர் சிந்துதுர்க் மாவட்டம் கங்காவலி தொகுதி எம்.எல்.ஏ ஆவார். 2019ம் ஆண்டு கங்காவலி தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மும்பை-கோவா நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வந்தது.

இந்த பணி சரிவர நடக்கவில்லை என குற்றம்சாட்டிய ராணே, 2019 ஜூலை 4ம் தேதி சாலைப் பணியை பார்வையிட காட் ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலத்துக்கு வருமாறு தேசிய நெஞ்சாலைத்துறை இன்ஜினியர் பிரகாஷ் ஷெடேக்கரை வரவழைத்தார். அங்கு வந்ததும் இன்ஜினியர் மீது ராணேயும், அவரது ஆதரவாளர்களும் சேற்று நீரை வாரி இறைத்தனர். மேலும் அவரை சேற்றில் நடக்கச் செய்து அவமானப்படுத்தினர்.

இது பற்றி கங்காவலி போலீசார் நிதேஷ் ராணே உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை சிந்துதுர்க் செசன்ஸ் கோர்ட் நீதிபதி வி.என்.தேஷ்முக் விசாரணை செய்தார். விசாரணை முடிவில் ராணேவை குற்றவாளி என தீர்ப்பளித்தார். மற்ற 29 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராத தொகையில் ரூ.50,000 இன்ஜினியர் பிரகாஷுக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ராணே மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக அவருடைய தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை கையில் எடுக்க எந்த உரிமையும் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

Related Stories: